கருவில் உள்ள குழந்தையின் மூளை செயல்பாடுகள் குறித்து ஆய்வு - சென்னை ஐ.ஐ.டி. புதிய சாதனை


கருவில் உள்ள குழந்தையின் மூளை செயல்பாடுகள் குறித்து ஆய்வு - சென்னை ஐ.ஐ.டி. புதிய சாதனை
x

கருவில் உள்ள குழந்தையின் மூளையை ஆய்வு செய்து சென்னை ஐ.ஐ.டி. புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம்' சார்பில், கருவில் உள்ள குழந்தையின் மூளை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ளது. தாயின் கருவில் உள்ள குழந்தையின் மூளை செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு வல்லுனர்கள் அடங்கிய குழுவினர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி மூளையை 5 ஆயிரத்து 132 பகுதிகளாக்கி அதனை டிஜிட்டல் முறையில் படமாக்கி உள்ளனர். இத்தகைய ஆய்வு உலகில் முதல் முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் மூளை வளர்ச்சி குறைபாடுகளுடன் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சையை தாயின் கருவிலேயே அளிக்க முடியும் என்றும் ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 115 கோடி ரூபாய் செலவில், 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு கிடைக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, இந்த ஆய்வின் மூலம் உலகில் பிறக்கும் எந்த ஒரு குழந்தைக்கும் மூளை சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்க முடிந்தால் அதுவே மிகப்பெரிய பரிசு என்பதால் இந்த ஆய்வின் தரவுகளை பொது பயன்பாட்டிற்காக நாங்கள் வெளியிடுகிறோம் என்று தெரிவித்தார்.


Next Story