வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்


வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்
x

வகுப்பறையில் மயங்கி விழுந்து 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த பெல்லியப்பா நகரைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (39 வயது). இவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தோல் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காவியா மற்றும் ஈஷா அத்விதா (14 வயது) என்ற இரண்டு மகள்கள் உண்டு. இதில் இளைய மகள் ஈஷா அத்விதா வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் ஈஷா அத்விதா, வழக்கம்போல் பள்ளிக்கு காலையில் சென்றுள்ளார். வகுப்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவி இறப்பு குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த மாணவிக்கு ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்ததாகவும், இதன் காரணமாக இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பள்ளி வகுப்பறையில் மாணவி மயங்கி விழும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story