'தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும்' - உதயநிதிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்


தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும் - உதயநிதிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்
x

தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஆலந்தூரில் புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் திருவண்ணாமலையில் 'கிரி'வலம் போகவில்லை, 'சரி'வலம் போனோம் என்று சொல்லியிருக்கிறார். எதுவாக இருந்தாலும் சரி, இடம் போய்க்கொண்டிருந்தவகள் இன்று வலம் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அதுவே ஆன்மிகத்தின் மிகப்பெரிய வெற்றிதான்.

அதேபோல் என்னைப்பற்றி சொல்லும்போது, 'இவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்' என்று சொல்கிறார். நான் என் அப்பா தோளிலோ, தாத்தா தோளிலோ ஏறி வரவில்லை. நானாக தட்டுத் தடுமாறி, தடம் மாறாமல் மக்களை சந்தித்து வருகிறேன். என்றைக்காவது ஒருநாள் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கவே கலக்காது என்று சொல்கிறார். நான் இன்று சவால் விடுகிறேன். தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும். அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்தது தமிழ். பெரியார் வளர்த்தது தமிழ் அல்ல, பெரியாழ்வார் வளர்த்தது தமிழ். இவர்கள் இருவரும் பேசிய சமூக நீதியை அண்ணாவும், பெரியாரும் பேசவில்லை.

எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் கொள்கை என்று கூறுகிறார். அது உண்மையென்றால், உதயநிதி ஸ்டாலின் இந்த வயதில் எப்படி துணை முதல்-அமைச்சர் ஆனார்? எல்லோருக்கும் எல்லாம் என்றால் எல்லோரையும் நீங்கள் பரிசீலனை செய்திருக்க வேண்டுமே?"

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story