மனநலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்


மனநலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
x

கோப்புப்படம்

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கும்பலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சென்னை அயனாவரத்தில் பத்துக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி - குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவரை ஒரு வருடத்திற்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

பாதிப்புக்குள்ளான மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கொடூரக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்திருக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை ஒரு வருடத்திற்கும் மேலாக அடையாளம் தெரியாத கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருவதையே வெளிப்படுத்துகிறது.

எனவே, மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, இனியாவது காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்களை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story