அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.
பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய மு.க.ஸ்டாலின் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்..?
யார் அந்த சார்.. என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் இதுபோன்ற "சார்"கள் காப்பாற்றப்படுவதால் தான், மேலும் பல "சார்"கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.