கழிவுநீர் செல்வதில் தகராறு: மூதாட்டியை அடித்துக்கொன்ற பக்கத்து வீட்டுப் பெண்


கழிவுநீர் செல்வதில் தகராறு: மூதாட்டியை அடித்துக்கொன்ற பக்கத்து வீட்டுப் பெண்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 23 Oct 2024 8:25 AM GMT (Updated: 23 Oct 2024 8:27 AM GMT)

மூதாட்டியை கல்லால் அடித்துக்கொலை செய்த பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள சொக்கலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. அவருடைய மகள் தவசிக்கண்ணு (64 வயது). இவருக்கு திருமணம் ஆகவில்லை. வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சண்முகசாமி மனைவி துரைச்சி (54 வயது). இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டின் முன் கழிவுநீர் செல்வது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த துரைச்சி, தவசிக்கண்ணுவை கீழே தள்ளிவிட்டார். அப்போது, கீழே கிடந்த கல்லால் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தவசிக்கண்ணு ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பனவடலிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயம் அடைந்த தவசிக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைச்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story