வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்


வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
x
தினத்தந்தி 27 March 2025 5:17 AM (Updated: 27 March 2025 6:28 AM)
t-max-icont-min-icon

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

சென்னை,

மத்திய அரசு சமீபத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் அந்த மசோதாவை கைவிட வேண்டும் என்று அரசினர் தீர்மானத்தை கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்து முன்மொழிந்தார். அப்போது முதல்-அமைச்சர் பேசியதாவது:-

இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது.

ஆனால், அதற்கு மாறாக, சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தினை திருத்துவதற்கு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு திருத்தச் சட்டமுன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று கூறினார்.

தொடர்ந்து தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். வக்பு தீர்மானத்திற்கு பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளியேறியது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன.

இதனையடுத்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


Next Story