10 மெமு ரெயில்களில் தலா 2 பெட்டிகள் குறைப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


10 மெமு ரெயில்களில் தலா 2 பெட்டிகள் குறைப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

10 மெமு ரெயில்களில் தலா 2 பெட்டிகள் குறைக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நடக்க உள்ளதால் கூடுதல் ரெயில்கள் மற்றும் ரெயில் பெட்டிகள் தேவைப்படுகின்றது. இதனால், குறுகிய தூரத்தில் இயக்கப்படும் 'மெமு' வகை மின்சார ரெயில்களில் பெட்டிகள் தற்காலிகமாக குறைத்து இயக்கப்பட உள்ளன. அதன்படி, 10 ரெயில்களில் தற்போதுள்ள 12 பெட்டிகளில் இருந்து தலா 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்படும்.

அதன்படி, எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புதுச்சேரி செல்லும் ரெயிலில் நேற்று முதல் 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்பட்டது. இதேபோல, புதுச்சேரியில் இருந்து மதியம் 2.55 மணிக்கு திருப்பதி செல்லும் ரெயில், திருப்பதியில் இருந்து காலை 4.30 மணிக்கு புதுச்சேரி செல்லும் ரெயில், புதுச்சேரியில் இருந்து மதியம் 3.50 மணிக்கு எழும்பூர் செல்லும் ரெயில் ஆகியவற்றில் இன்று முதல் (22-ந்தேதி) தலா 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்படுகிறது.

விழுப்புரத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு தாம்பரம் செல்லும் ரெயில், தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் ரெயில், விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் ரெயில் ஆகியவற்றில் வரும் 26-ந்தேதி முதல் ரெயில் பெட்டிகள் குறைத்து இயக்கப்படும்.

இதேபோல, தாம்பரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு விழுப்புரம் செல்லும் ரெயில், திருவண்ணாமலையில் இருந்து காலை 4 மணிக்கு தாம்பரம் செல்லும் ரெயில் ஆகியவற்றில் வரும் 27-ந்தேதி முதல் தலா 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்பட உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரையில் இது தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story