எலி மருந்து விவகாரம்: தனியார் நிறுவனத்திற்கு சீல்

2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை,
சென்னை குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி பகுதியில் வசிப்பவர் கிரிதரன் (வயது 34). இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவது மனைவி பெயர் பவித்ரா. இந்த தம்பதிக்கு விஷாலினி (6) மற்றும் சாய் சுதர்சன் (1) என இரு குழந்தைகள் இருந்தனர். இவரது வீட்டில் எலி தொல்லை அதிகம் இருந்துள்ளது. இதனால் எலி மருந்து வைக்க அவர் முடிவு செய்தார்.
இதுதொடர்பாக சென்னை தி நகரில் உள்ள பெஸ்ட் கண்ட்ரோல் எனும் தனியார் நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்டார். அதன்பிறகு கடந்த 13ம் தேதி அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு சென்று எலி மருந்து வைத்தனர். அப்போது எலி மருந்தின் நெடி அதிகம் வந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் எலி மருந்தின் நெடி குறைந்து விடும் என நினைத்து கிரிதரன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டில் கதவை பூட்டி தூங்கினார்.
அப்போது வீட்டு ஜன்னல், கதவுகள் என அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தது. மறுநாள் காலை கிரிதரன் மனைவி பவித்ரா மற்றும் 2 குழந்தைகள் என அனைவரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் 2 பேரும் மயங்கினர். இதையடுத்து கிரிதரன் உள்பட நால்வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குழந்தைகள் விஷாலினி, சாய் சுதர்சன் ஆகியோர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அதிக வீரியம் கொண்ட எலி மருந்து வைத்ததால் அதில் இருந்து வந்த நெடி தாங்க முடியாமல் குழந்தைகள் இரண்டு பேரும் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சென்னை தி நகரில் செயல்பட்டு வந்த எலி மருந்து வைக்கும் பெஸ்ட் கன்ட்ரோல் அலுவலகத்தின் உரிமம் நேற்று ரத்து செய்யப்பட்டநிலையில், இன்று தி நகரில் செயல்பட்டு வந்த பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்துக்கு வேளாண் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.