ராமேஸ்வரம்: ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த உடை மாற்றும் அறைக்கு சீல்


ராமேஸ்வரம்: ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த உடை மாற்றும் அறைக்கு சீல்
x

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.

ராமேஸ்வரம்,

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர், கடற்கரை எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் உடை மாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அறைக்குள் ரகசிய கேமரா இருந்ததை, இளம்பெண் ஒருவர் கண்டுபிடித்து தனது தந்தையிடம் கூறினார். இதுகுறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, அங்கு வேலை செய்த ஊழியர்களான ராஜேஷ் கண்ணன்( 34) மீரான் மைதீன்( 38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அங்குள்ள உடை மாற்றும் அறையில் பல மாதங்களாக ரகசிய கேமரா வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து, இவர்கள் இருவரும் மொபைல் போனில் பார்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரிக்க துவங்கி உள்ளனர். நிறைய பெண்களை இவர்கள் படம் பிடித்து உள்ளதால் அதுதொடர்பான வீடியோக்களை வைத்து யாரையும் மிரட்டினார்களா அல்லது வலைத்தளங்களிலோ, வேறு யாருக்கும் பகிர்ந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி, கிராம நிர்வாக அலுவலர் ரொட்ரிகோ முன்னிலையில் போலீசார், ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையை பூட்டி சீல் வைத்தனர்.


Next Story