பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது - 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்


பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது - 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 29 Dec 2024 4:26 AM IST (Updated: 29 Dec 2024 1:17 PM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

சென்னை,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்குகிறது.

'ஸ்பேடெக்ஸ்-ஏ', 'ஸ்பேடெக்ஸ்-பி' என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது.

இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன்படி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக 'ஸ்பேஸ்-எக்ஸ்' எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 'ஸ்பேஸ் டாக்கிங்' எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த சூழலில் 'ஸ்பேஸ்-எக்ஸ்' திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் தயார் நிலையில் நேர் நிறுத்தப்பட்டு உள்ளது. இது நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்ப வரவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று கூறப்படுகிறது.

தனித்தனியான இரு விண்கலன்களை, விண்வெளியில் சென்று இணைய செய்வதற்கான இந்த சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


Next Story