கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் - மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அறிவிப்பு
கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மாஞ்சோலையில் இயங்கி வந்த தனியார் தேயிலை தோட்ட நிறுவனம், ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே உற்பத்தியை நிறுத்தியதால் அங்குள்ள தொழிலாளர்கள் வருமானம் மற்றும் உரிய அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். இது தொடர்பான மனித உரிமை மீறல் வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதனால் வரும் 11-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாகவும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து அம்பை தாலுகா அலுவலகத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாஞ்சோலை தொழிலாளர்களிடம் தாசில்தார் உறுதி அளித்தார்.