கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்கள்: தமிழக அரசு பெருமிதம்


கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்கள்: தமிழக அரசு பெருமிதம்
x
தினத்தந்தி 11 Nov 2024 12:34 PM IST (Updated: 11 Nov 2024 12:43 PM IST)
t-max-icont-min-icon

கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் உயிர் அதன் கிராமப்புறங்களில்தான் உள்ளது என்றார் அண்ணல் காந்தியடிகள். கிராமப்புற மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள், நெசவாளர்கள், உடல் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு உழைக்கும் தொழிலாளர்கள் இந்த மக்களின் உழைப்பால்தான் ஏனையோர் வாழ முடிகிறது. இந்தக் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காகக் கிராமப்புற வளர்ச்சிக்குத் தனி முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும்.

திமுக ஆட்சி அமையும் காலங்களில் எல்லாம் கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் அரிய பல திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 40 மாதகால திராவிட மாடல் ஆட்சியில் கிராமப் புறங்களில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்திப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கிராம ஊராட்சிகளில் தகவல் தொழில் நுட்பச் சாதனங்கள்:-

கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்திடும் விதமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின்கலன்கள் சாதனம் ஆகியவை நிறுவப்பட்டு ஊராட்சி அலுவலகங்களில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

இணையதளம் வாயிலாக அரசுச் சேவைகள்:-

சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட அனுமதி போன்ற குடிமக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை மக்கள் இணையதளம் வாயிலாக எளிதில் பெற உதவும் வகையில் ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான Vptax Portal நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நம்ம கிராமசபை - புதிய செயலி:-

கிராமசபை நிகழ்வுகளைக் கண்காணித்திட துறையானது "நம்ம கிராம சபை" என்கிற புதிய கைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:-

2021 முதல் மூன்று ஆண்டுகளிலும் பெண்கள் 86.26 சதவீதத்திற்கும், மாற்றுத் திறனாளிகள் 2,95,664 பேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரில் 29.59 சதவீதத்தினரும் பயன் பெற்றுள்ளனர். 3 ஆண்டுகளிலும் ரூ.34,609.44 கோடியில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 334 குடும்பங்கள் 100 நாள்கள் வேலை செய்து பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நான்காவது ஆண்டில் ரூ.6,359.24 கோடி ஒதுக்கீட்டில் 100 நாள் வேலைகள் நடைபெறுகின்றன. இத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுவதன் மூலம் நீடித்த நிலைத்த வளர்ச்சியின் குறிக்கோள்களான பசியின்மை, வறுமையின்மை, பாலின வேறுபாடின்மை, ஆகியவை நம் நாட்டில் எய்தப்படுகிறது.

ரூ. 594 கோடியில் ஊராட்சிகளில் சிறப்புப் பணிகள்:-

2021-22ம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகங்கள். ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முகாம் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம், எரிவாயு தகன மேடை, சாலைகள், பாலங்கள், சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள், பேருந்து நிலையம் மற்றும் நிறுத்தம், சமுதாயக்கூடங்கள், மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா போன்ற மொத்தம் 154 பணிகளை நிறைவேற்றிட ரூ.594 கோடி மதிப்பீட்டில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஊரக வீடு வழங்கும் திட்டங்கள்:-

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின்கீழ் முந்தைய ஆட்சிக் காலமான 2016-17 முதல் 2019-20 வரையிலும், திராவிட மாடல் ஆட்சிகாலமான 2021-22 ஆம் ஆண்டுகளிலும் மொத்தமாக 7,38, 139 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2016-17 முதல் 6.5.2021 வரையிலான காலகட்டத்தில் 2,89,730 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 3,30,757 வீடுகள் 7.5.2021 முதல் 3.10.2024 வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வீடுகளும் முடிவடையும் நிலையில் உள்ளன.

கலைஞரின் கனவு இல்லம்:-

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்கூறிய ஒரு லட்சம் வீடுகளும் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டுமான நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளது.

நமக்கு நாமே திட்டம்:-

ஊரகப் பகுதி மக்களின் சுய உதவி, சுயச்சார்பு எண்ணம் ஆகியவற்றை வலிமைப்படுத்தவும், பரவலாக்கவும் மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1997-98 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக 2021-22ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டிற்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பயன்பாட்டிற்காக 728 கட்டடங்களும், 91 கட்டடங்களும், பொதுமக்கள் பயன்படுத்த பேருந்து நிழற்குடை, பேருந்து நிலையம், கதிரடிக்கும் களம் உட்பட 6,480 பணிகள் எடுக்கப்பட்டு 5,783 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்:-

இத்திட்டத்தின்கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக நிலையான சொத்துகளை உருவாக்குவது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், ஒரு தொகுதிக்கு ஒரு ஆண்டிற்கு ரூ.3.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.702 கோடி வீதம் 2021-22 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கு மொத்தம் ரூ.2,808 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டத்தின்கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பயன்பாட்டிற்காக 5872 கட்டடங்களும் 1245 பிறதுறைக்கான கட்டடங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்து நிழற்குடை / பேருந்து நிலையம் எரிமேடை, சுடுகாடுகளுக்கு சுற்றுசுவர் போன்ற உட்கட்டமைப்புகள் உட்பட 34015 பணிகள் எடுக்கப்பட்டு 26,338 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

தூய்மை பாரத இயக்கம்:-

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடும்பத்திலும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் பெரும் பொருட்டு 2021-22-ல் இருந்து இதுவரை 2,43,770 குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் மற்றும் பிறகுடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்ட போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் அந்தக் குடியிருப்புகளுக்கு 5,110 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

நம்ம ஊரு சூப்பரு பிரசாரம்:-

நம்ம ஊரு சூப்பரு - Namma Ooru Sooperu' சுகாதாரம் மற்றும் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புற சமூகத்தினரிடையே நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தவும், அதை நிலைநிறுத்தவும் சிறப்புப் பிரச்சாரம் ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை நடத்தப்பட்டது.

"நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" செயல்படுத்தப்பட்டபோது 37 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் சுமார் 47,339 குப்பை கொட்டும் இடங்கள் 16,829 பொதுஇடங்கள், 21,775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடிகள், 45,824 அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள், 47,949 கிராமப்புற நீர் நிலைகள், 10,011 சமுதாய சுகாதார வளாகம், 15,69,348 மீட்டர் கழிவுநீர் வடிகால்கள் ஆகியவை சுமார் 14,31,591 பணியாளர்களைக் கொண்டு தீவிர துப்புரவு நடவடிக்கைகளில் பங்கேற்றுச் சுத்தம் செய்யப்பட்டன.

ஊக்குவிப்பாளர்கள் சுய உதவிக் குழுக்கள் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களால் 13,659 பள்ளிகள் மற்றும் 343 கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு ஒரே வாரத்தில் 4 லட்சம் மரங்கள் நடப்பட்டன. தீவிர துப்புரவு நடவடிக்கையின் வாயிலாக 2,563.9 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதில் சுமார் 45 சதவீத கழிவுகள் குப்பைகளைப் பிரிக்கும் கொட்டகைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டும் மீதம் உள்ள கழிவுகள் நுண் உரமாக்கப்பட்டும், உரக்குழிகள் மற்றும் நெகிழி கழிவு மேலாண்மை அலகுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

மத்திய அரசின் விருது:-

ஒவ்வொரு ஆண்டும் ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாகக் கொண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் 2021-22ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் தமிழ்நாட்டிற்கு குடியரசுத் தலைவர் அவர்களால் மூன்றாம் இடத்திற்கான விருது வழங்கப்பட்டது.

2024-ம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிடவும், தேவையான அளவிலும நிர்ணயிக்கப்பட்ட BIS 10500 தரத்திலும் வழக்கமான மற்றும் நீண்ட காலத் தேவைக்கு ஏற்பக் குறைந்த குடிநீர் சேவை கட்டணத்துடன் குடிநீர் விநியோகம் செய்வதே ஜல்ஜீவன் இயக்கத்தின் நோக்கமாகும்.

ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் இதுவரை கிராமப் புறங்களின் 7,15,1339 வீடுகளுக்கு ரூ.2,123.36 கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் மகத்தான திட்டங்கள் பலவற்றைச் சிறப்பாக நிறைவேற்றி வெற்றிகண்டு வரலாறு படைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story