த.வெ.க. பெயர் பலகையை அகற்ற வந்த போலீசார் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள்


த.வெ.க. பெயர் பலகையை அகற்ற வந்த போலீசார் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள்
x

த.வெ.க. பெயர் பலகையை அகற்ற வந்த போலீசாரிடம் கட்சி தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில், அக்கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை த.வெ.க. தொண்டர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் த.வெ.க. கொடிக்கம்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பெயர் பலகைகள் ஆகியற்றை நிறுவும் பணியை அக்கட்சியின் தொண்டர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் சென்னை தண்டையார்பேட்டை 42-வது வட்டத்தில் த.வெ.க. சார்பாக கட்சியின் கொடிக்கம்பம் மற்றும் பெயர் பலகையை வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் அங்கு வந்த போலீசார், நலத்திட்ட உதவிகள் வழங்க மட்டுமே அனுமதி தந்ததாகவும், கொடிக்கம்பம் வைக்க கட்சி நிர்வாகிகள் காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என்றும் கூறி த.வெ.க. கொடிக்கம்பம் மற்றும் பெயர் பலகையை அகற்ற முயன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. தொண்டர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பெயர் பலகை வைக்கும் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சட்டப்பூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என த.வெ.க.வினர் தெரிவித்துள்ளனர்.


Next Story