"அடுத்த 24 மணி நேரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால்.." - ராமதாஸ்


அடுத்த 24 மணி நேரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால்.. - ராமதாஸ்
x

கோப்புப்படம்

கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கொக்கரித்துள்ளனர். கடலூர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

வன்னியர்களும், பட்டியலினத்தவரும் நட்புடன் வாழ வேண்டும், பட்டியலின மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். இந்த நோக்கத்தை சிதைக்கும் வகையிலான எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு, கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். இது எங்களின் நல்ல நோக்கமே தவிர பலவீனம் அல்ல. அதே நேரத்தில் கொட்டக் கொட்ட குனிந்து கொண்டிருக்கவும் மாட்டோம் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர வேண்டும்.

மஞ்சக்கொல்லை செல்லத்துரையை கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்வது மட்டுமின்றி, பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் இந்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போடப்பட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story