திருவண்ணாமலையில் பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி


திருவண்ணாமலையில் பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி
x

போலீசாரின் கெடுபிடியால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பொதுமக்களும், பக்தர்களும் வேதனை தெரிவித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் தீபமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக பஸ், ரெயில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தீபத்திருவிழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து விடுதிகளில் தங்கினர். இதனால் விடுதிகள் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.

திருவண்ணாமலைக்கு வந்த பக்தர்கள் நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். கோவில் அருகே கிரிவலத்தின் போது சில இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் போலீசார் கயிறுகளை கட்டி பக்தர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இந்தநிலையில், வேலூர் சாலையில் உள்ள தீபம் நகர், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பரணி தீபத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட பாஸ்களுடன் இருசக்கர வாகனத்தில் பக்தர்கள் வந்தனர். அவர்களை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகம், அண்ணா நுழைவு வாயில் போன்ற பகுதிகளில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

பரணி தீப பாஸ்களை காண்பித்து கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியபோதும் இந்த பாஸ்கள் எல்லாம் செல்லாது என்று கூறி பக்தர்களை திருப்பி அனுப்பினர். கடந்த 3 நாட்களாக பெரியார் சிலை, மாட வீதிகளில் இருசக்கர வாகனங்களை செல்ல விடாமல் போலீசார் தடுத்ததால் உள்ளூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முதியோர், மாற்றுத்திறனாளிகளைக்கூட தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்காமல் சுற்றிச் செல்லுங்கள் என்று கூறி போலீசார் அலையவிட்டனர். போலீசாரின் இந்த கெடுபிடியால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பொதுமக்களும், பக்தர்களும் வேதனை தெரிவித்தனர்.


Next Story