சேலத்தில் பா.ம.க. எம்.எல்.ஏவை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. எம்.எல்.ஏவை தாக்கியவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் ரூ.4.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. எம்.எல்.ஏ அருளை திமுகவினர் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டுள்ளனர். எம்.எல்.ஏவை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் பா.ம.க. எம்.எல்.ஏ அருளின் மூன்றாண்டு கால தொடர் முயற்சியால் கொண்டு வரப்பட்டது ஆகும். ஒரு எம்.எல்.ஏவை அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளக்கூட விடாமல் தடுப்பது தான் பாசிசம் ஆகும். திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ அருளை தாக்கியவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.