டாஸ்மாக் ஊழல்: முற்றுகை போராட்டம் நடத்த திட்டம் - வீட்டு காவலில் பா.ஜ.க. தலைவர்கள்


டாஸ்மாக் ஊழல்:  முற்றுகை போராட்டம் நடத்த திட்டம் - வீட்டு காவலில் பா.ஜ.க. தலைவர்கள்
x
தினத்தந்தி 17 March 2025 4:23 AM (Updated: 17 March 2025 5:36 AM)
t-max-icont-min-icon

ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

டாஸ்மாக் மற்றும் அதனுடன் தொடர்புடைய மது ஆலைகளில் கடந்த 6-ம் தேதி முதல் 3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகள் தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மது ஆலைகளும், பாட்டில் நிறுவனங்களும் சிறப்பாக ஒருங்கிணைந்து ரூ.1,000 கோடி கணக்கில் வராத பணத்தை ஒதுக்கியுள்ளன.

டாஸ்மாக் நிறுவனத்திடம் கூடுதலாக மது வழங்கும் ஆணை பெறுவதற்காக கையூட்டு வழங்க இந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர போக்குவரத்து ஒப்பந்தம், பார் ஒதுக்கீடு, மதுப்புட்டிகளுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது, பணியாளர்களை பணியிடமாற்றம் செய்ய கையூட்டு வாங்கியது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

இவை அனைத்தும் 1988-ம் ஆண்டின் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி குற்றம் என்றும், இதன் மூலம் கிடைத்த பயன்கள் 2002-ம் ஆண்டின் கருப்புப்பண மாற்ற தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மதுவிலக்கு துறையின் இன்றைய அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.

இந்நிலையில், ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக, தி.மு.க. அரசுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த சூழலில், அக்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இன்று காலை முதல் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச். ராஜா மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீடுகளின் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் முன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இதனை முன்னிட்டு, பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் செல்வம் கைது செய்யப்பட்டார். அவரை தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்று போலீசார் தங்க வைத்துள்ளனர். பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வீட்டின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story