விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியல்


விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியல்
x

மீட்பு பணி நடக்கவில்லை என கூறி விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத மழையால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் மீளமுடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கால் திரும்பும் திசையெல்லாம் தீவாக காட்சி அளிக்கிறது. அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மழை ஓய்ந்து 2 நாட்களாகியும் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை. அதுபோல் 3 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக தண்ணீர் இன்றி பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில், தண்ணீர் வடியாத பகுதிகளில் மீட்புப்பணிகள் நடைபெறவில்லை என்றும், அதிகாரிகள் யாரும் எட்டிப்பார்க்கவில்லை என்றும், தங்களுக்கு நிவாரண பொருட்கள் ஏதும் வழங்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் புறவழிச்சாலையில் திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதேபோல அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story