பகுதிநேர ஆசிரியர்கள் கைது - சீமான் கண்டனம்


பகுதிநேர ஆசிரியர்கள்  கைது - சீமான் கண்டனம்
x

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பணிநிரந்தரம் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தை முற்றுகையிடும் அறப்போராட்டத்தை முன்னெடுக்க இருந்த பகுதிநேர ஆசிரியர்களைக் கைதுசெய்து அடக்குமுறையை ஏவிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மிக நியாயமானவையாகும். நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஆதரிக்கிறது.

ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சிற்பிகளாக விளங்குபவர்கள் ஆசிரியப்பெருந்தகைகள். அந்த ஆசிரியப்பெருந்தகைகளே வீதிக்கு வந்து தங்களது உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் போராட வேண்டியிருப்பது பெரும் இழிநிலையாகும். அறிவுக்கருவறையைத் தீர்மானிக்கும் ஆசிரியப்பெருமக்களது நியாயமான குரலுக்குச் செவிசாய்க்க மறுத்து, அவர்களை அரசதிகாரம் கொண்டு அடக்கி ஒடுக்க முற்படுவது பெரும் கொடுங்கோன்மையாகும். பணவீக்கமும், விலைவாசி உயர்வும் உச்சத்திலிருக்கும் தற்காலப் பொருளாதாரச் சூழலில், வெறும் 12,500 ரூபாய் எனும் சொற்ப வருமானத்தில் அவர்களைத் தற்காலிகப் பணியாளர்களாக வைத்திருப்பது ஏற்கவே முடியாத உழைப்புச்சுரண்டலாகும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்து அவர்களின் வாக்குகளைப் பெற்று, அதிகாரத்திற்கு வந்த திமுக, இன்றைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்து, போராடுவோரை அதிகாரப்பலம் கொண்டு அடக்க முற்படுவது துரோகமாகும். ஒவ்வொரு முறையும் ஆசிரியப் பெருமக்கள் போராட்டம் நடத்தும்போதெல்லாம் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டாது, போராட்டத்தை சிதைப்பதிலேயே கவனமாக இருப்பதும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது இழுத்தடித்துக் காலங்கடத்துவதும் அட்டூழியத்தின் உச்சமாகும்.

12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணிபுரியும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் கேட்பதற்கான முழு உரிமையுண்டு. 3 ஆண்டுகள் பணிபுரியும் பணியாளர்களையே, பணிநிரந்தரம் செய்ய நீதிமன்றங்கள் வழிகாட்டும்போது, பள்ளிக்கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியப்பெருமக்களை பணிநிரந்தரம் செய்யாதிருப்பது பெரும் அநீதியாகும். பணி நிரந்தரம், பழைய ஓய்வூதிய நடைமுறை உள்ளிட்டக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்து, பகுதிநேர ஆசிரியர்கள், அரசு ஊழியர்களாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த திமுக, இன்றைக்கு அவ்வாக்குறுதிகள் யாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுட்டு, வஞ்சகத்தை விளைவிப்பது அரசியல் அறத்துக்கே புறம்பானதாகும். ஆகவே, பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.


Next Story