எழும்பூர், வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதல் நுழைவு வாயில் திறப்பு


எழும்பூர், வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதல் நுழைவு வாயில் திறப்பு
x

மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகளுடன் கூடுதல் நுழைவுவாயில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற வற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரெயிலில் தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், எழும்பூர் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நுழைவுவாயில் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"எழும்பூர் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகளுடன் கூடுதல் நுழைவுவாயில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவு வாயிலை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா (பராமரிப்பு மற்றும் இயக்கம்), நேற்று மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த நுழைவுவாயில் நேற்று (02.12.2024) முதல் பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story