'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஜனநாயகத்தை கொன்றுவிடும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற பாஜக அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஜனநாயகத்தை கொன்றுவிடும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நாட்டில் ஜனநாயகத்தை கொன்றுவிடும். நாட்டின் பன்முகத்தன்மையை அழித்துவிடும். நாட்டை ஒற்றை ஆட்சி வடிவத்தின் அபாயங்களுக்குள் தள்ளும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த மசோதா நிறைவேறி அமலானால், அரசியலமைப்பு சட்டமே அர்த்தமற்றதாகிவிடும். மாநிலங்கள் உரிமையை இழந்து பிராந்திய உணர்வுகள் அழிக்கப்படும். தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்படும் பாஜகவின் முயற்சியை எதிர்க்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை இல்லாதபோதும் மசோதாவை கொண்டுவந்து பிரச்சினைகளை திசைதிருப்ப பாஜக முயற்சிக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை, அரசியலமைப்பையும் காப்பாற்ற ஜனநாயக சக்திகள் போராட வேண்டும்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.