'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா: நிச்சயம் முறியடிப்போம் - செல்வப்பெருந்தகை
‘ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. இதில் அதானி முறைகேடு, மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை போன்ற பிரச்சினைகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் நடைபெறவில்லை.குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்படி இந்த தொடர் கடைசி வாரத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஒரே நாடு, ஒரே தேர்தல்-" திட்டம் தொடர்பான இரண்டு முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நாட்டு மக்களும் எதிர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் எதேச்சதிகார போக்குடன் ஆளும் பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
பா.ஜ.க.வின் இது போன்று மக்கள் விரோத அராஜக போக்கினை நாட்டு மக்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நிச்சயம் முறியடிப்பார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.