'ஒரேநாடு ஒரே தேர்தல்': முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி


ஒரேநாடு ஒரே தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
x

‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது. இந்த சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் மாநிலங்களின் குரல்களை அழித்து கூட்டாட்சித்தன்மையை சிதைத்து ஆட்சியை சீர்குலைக்கும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் 'ஒரேநாடு ஒரே தேர்தல்'மசோதா தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "'ஒரேநாடு ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி. முதல்-அமைச்சர் தனது தந்தையின் சுயசரிதை நூலை படிக்கவில்லை என்று தெரிகிறது. ஒழுங்கற்ற தேர்தல் சுழற்சி அரசு திட்டங்களை செயல்படுத்த இடையூறு என கருணாநிதி கூறியிருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 'ஒரேநாடு ஒரே தேர்தல்'முறையை கருணாநிதி ஆதரித்ததாக கூறி படத்துடன் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.




Next Story