பொய்களை எத்தனை முறை கூறினாலும் எடுபடாது: எடப்பாடி பழனிசாமிக்கு ரகுபதி கண்டனம்
திராவிட மாடல் நல்லாட்சி மீது சிறு கீறல் கூட விழவைக்க முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரைத்த பொய்களையே தொடர்ந்து அரைப்பதாகவும், பொய்களை எத்தனை முறை கூறினாலும் எடுபடாது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது.
"அறிக்கைகளிலும் எக்ஸ் தளத்திலும் பேட்டிகளிலும் சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கொந்தளித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் புஸ்வானமான நிலையில், இப்போது யூடியூப்பிலும் வந்து அதே புலம்பலை, அதே பொய்களைக் கடைப்பரப்ப ஆரம்பித்துவிட்டார்.
பெஞ்சல் புயல், சாத்தனூர் அணைத் திறப்பு, பாலம் உடைப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சிபிஐ விசாரணை உத்தரவு என அவருடைய சமீபத்திய பொய்களை எல்லாம் உடனுக்குடன் ஆதாரத்துடன் திமுக அரசு தவிடுபொடியாக்கியும்கூட, கொஞ்சமும் கூச்சப்படாமல் அதே பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்."
வயிற்றெரிச்சலில் கூறிய பொய்களையே திரும்பத் திரும்ப எத்தனை முறை கூறினாலும் எடுபடாது. ஆயிரம் பொய்களைக் கூறினாலும் திராவிட மாடல் நல்லாட்சி மீது சிறு கீறல் கூட விழவைக்க முடியாது."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.