பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை: ஜி.கே.வாசன்
மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
சென்னை,
த.ம.க. தலைவர் ஜி.கே.வாசன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது தான் இதற்கு காரணம்.
தமிழக அரசு, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகள், பெண்கள் மற்றும் முதியோருக்கான பாலியல் தொந்தரவுகள் தொடர்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் பாலியல் வன் கொடுமைக்கு எதிரான காவல்துறையினரின் நடவடிக்கைகள் முறையானதாக அமையவில்லை. குறிப்பாக சென்னையில் மன நலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் மீது இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
அதாவது இந்த பாலியல் வன்கொடுமை குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதற்கான நடவடிக்கைள் முறையாக எடுக்கப்படவில்லை எனவும் செய்திகள் வெளிவருகின்றன.
மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மீது பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்ட கொடூரமானவர்களை உடனடியாக கைது செய்து, சிறையில் அடைத்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.
ஆனால் காவல்துறையினர் குற்றவாளிகளை எச்சரித்து அனுப்பியதாக வரும் செய்தியால் அந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகளுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் இது போன்ற ஒரு கொடுமை நடைபெறாது. இக்குற்றச்செயலில் ஈடுபட்ட மனிதாபிமானமற்ற, கல்நெஞ்சம் படைத்த கொடியவர்களை காப்பாற்ற நினைப்பவர்களும் கொடியவர்களே.
எனவே தமிழக அரசே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க குற்றவாளிகளை கைது செய்யவும், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.