சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில் சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
சென்னையில் சீராக குடிநீரை விநியோகிக்க ரூ.2,423 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். ரூ.88 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும். அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.