'திருவண்ணாமலைக்கு நாளை 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்' - அமைச்சர் சிவசங்கர் தகவல்


திருவண்ணாமலைக்கு நாளை 800 சிறப்பு பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
x
தினத்தந்தி 12 Dec 2024 9:31 PM IST (Updated: 12 Dec 2024 9:39 PM IST)
t-max-icont-min-icon

தீபம் ஏற்றப்பட்ட பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக 10,000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் திருவண்ணாமலைக்கு நாளை 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் தீபம் ஏற்றப்பட்ட பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக 10,000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் "கிளாம்பாக்கம் கலைஞர் பஸ் முனையத்தில் இருந்து" சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர், துறை சார்ந்த அலுவலர்களிடம் கலந்தாலோசித்தார்.

முன்னதாக இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில், "திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாள் நாளை (டிச.13) மற்றும் பவுர்ணமி சனிக்கிழமை (டிச.14) ஆகிய தினங்களில் நடைபெறுவதை முன்னிட்டு, வியாழக்கிழமை (டிச.12) முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) வரை சென்னையில் இருந்து சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 296 பஸ்களும், நாளை 643 பஸ்களும், சனிக்கிழமை 801 பஸ்களும், ஞாயிற்றுக்கிழமை 269 பஸ்களும் என மொத்தம் 1,982 பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 948 பஸ்களும், நாளை 3,689 பஸ்களும், சனிக்கிழமை 2,543 பஸ்களும், ஞாயிற்றுக்கிழமை 947 பஸ்களும் என மொத்தம் 8,127 பஸ்கள் இயக்கப்பகின்றன. அதன்படி திருவண்ணாமலைக்கு மொத்தம் 10,109 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது


Next Story