பருவமழை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (08.11.2024) சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் பருவமழைக்காலம் மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் 6,68,225 ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்டு, கடந்த 01.07.2024 முதல் 15.10.2024 வரை மொத்தமாக 13,73,051 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதிலும், குறிப்பாக, 47,380 மின்கம்பங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன, சாய்ந்த நிலையில் இருந்த 33,494 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன, புதியதாக 27,329 மின் கம்பங்கள் இடைசெருகல் செய்யப்பட்டிருக்கின்றன.
2,17,775 இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன, 41,508 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன, பழுதடைந்த 7,118 இடங்களில் பில்லர் பாக்ஸ்கள் சரிசெய்யப்பட்டுள்ளன, இதுதவிர்த்து சுமார் 2,927 கி.மீ. பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 13,73,051 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மின் பகிர்மான வட்டம் வாரியாக விரிவான ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர், வட்ட அளவில் அதிக அளவு மின் தடைகள், மின்மாற்றிகள் பழுது மற்றும் புகார்கள் கொண்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் தமது பணிகளில் தனிக்கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகள் ஆகியவற்றில் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தனிக்கவனம் செலுத்தி மின்நுகர்வோரிடமிருந்து வரும் புகார்களை குறைப்பதற்கு தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும் அதற்கான காரணத்தை அந்தந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிடமிருந்து சமூக வலைதளங்கள் வாயிலாக பெறப்படும் புகார்கள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
மின் சேவைகள் மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.