முதல் முறையாக தூர்வாரப்பட உள்ள மேட்டூர் அணை
தமிழ்நாட்டின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் கொடுக்கும் சொத்தாக மேட்டூர் அணை போற்றப்படுகிறது.
சென்னை,
1934-ம் ஆண்டில் கட்டப்பட்ட மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். இது காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி. தமிழ்நாட்டின் 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் வசதிகளை அணை வழங்குகிறது. எனவே தமிழ்நாட்டின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் கொடுக்கும் சொத்தாக மேட்டூர் அணை போற்றப்படுகிறது.
மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், அணையின் கொள்ளளவில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு மண் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அணையை தூர் வாரினால், 30 டிஎம்சி அளவிற்கு கூடுதலாக தண்ணீரை சேமிக்க முடியும் எனக் கூறப்படுவதால், இதற்காக விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், 90 ஆண்டுகளில் முதல்முறையாக மேட்டூர் அணையை தூர்வார தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. சோதனை அடிப்படையில் அணையின் குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வாரப்படவுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.