மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு: உதயநிதி ஸ்டாலின்
மன்மோகன் சிங் மறைவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைந்தார் என்கிற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது. இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை மன்மோகன் சிங்கின் காலகட்டத்திற்கு முன் - பின் என்று குறிப்பிடும் அளவுக்கு மாற்றியமைத்தவர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பாசத்துக்கும், மதிப்புக்கும் உரியவர். நூறு நாள் வேலைத்திட்டம் உட்பட பல ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மூலம் கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர். 10 ஆண்டுகள் பிரதமர் பொறுப்பில் இருந்து நிறைய சாதித்த நிறைகுடம் மன்மோகன்சிங் அவர்கள். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பெற்றத் திட்டங்களும் - அடைந்த வளர்ச்சியும் அதிகம்.
உலகப் பொருளாதாரத்தின் திசைவழியை சரியாகப் புரிந்துகொண்டு இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்த மன்மோகன் சிங் அவர்களின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பாகும். அவர்களின் மரணத்துக்கு எனது ஆழந்த இரங்கல். அவரை இழந்து வாடும் காங்கிரஸ் பேரியக்கத்தினர் - குடும்பத்தினர் - நண்பர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.