பல பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன்.. செல்போனை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுப்பெண்


பல பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன்.. செல்போனை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுப்பெண்
x
தினத்தந்தி 8 Dec 2024 11:08 AM IST (Updated: 8 Dec 2024 12:03 PM IST)
t-max-icont-min-icon

லிஜினின் செல்போனை அவரது புது மனைவி ஆய்வு செய்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம் நெய்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த 27 வயதாகும் லிஜின் என்பவருக்கும் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண் என்ஜினீயருக்கும் இருவீட்டு பெற்றோர் ஏற்பாட்டின் பேரில், உறவினர்கள் முன்னிலையில் கடந்த 2-ந் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர் பெண் வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் லிஜின் மீது சந்தேகம் வந்தது. திருமண நேரத்தில் பெண் ஒருவர் சண்டை போட்டதால், அவர்கள் ரகசியமாக லிஜின் குறித்து விசாரிக்க தொடங்கினார்கள். இதன்படி லிஜினின் செல்போனை, அவரது புது மனைவியான பெண் என்ஜினீயர் ஆய்வு செய்தார்.

அதில் லிஜினுக்கு இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும், அந்த பெண்களுடன் அவர் பேசிய உரையாடல் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடந்த 2019-ம் ஆண்டு காரைக்காலை சேர்ந்த பெண்ணை காதலித்து, ஆசை வார்த்தை கூறி 6 மாதம் கர்ப்பம் ஆக்கி உள்ளார். இதுபற்றி இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் காரைக்கால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் கொடுத்து சமாதானம் பேசி முடித்துள்ளனர்.

அதேபோல் 2022-ம் ஆண்டு தென்காசியை சேர்ந்த பெண்ணை காதலித்து ஏமாற்றி இருக்கிறார். இந்தநிலையில்தான் 2023-ம் ஆண்டு கடலூரை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி ஏமாற்றியதும், இதனால் அவர் சென்னை வந்து திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றதும் அந்த புதுப்பெண்ணுக்கு தெரிய வந்தது. இதையடுத்து தங்களை நம்ப வைத்து ஏமாற்றி மகளை திருமணம் செய்து கொண்டதாக பெண் என்ஜினீயரின் பெற்றோர், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்ததைத்தொடர்ந்து காதல் மன்னன் லிஜின் கைது செய்யப்பட்டார்.


Next Story