திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது: புவியியல் வல்லுநர்கள் தகவல்


திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது: புவியியல் வல்லுநர்கள் தகவல்
x

மலையின் தற்போதைய நிலை, பாறைகள் மற்றும் மண்ணின் தன்மை குறித்து புவியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 13-ந் தேதி ஏற்றப்பட உள்ளது. அன்றைய தினம் திருவண்ணாமலைக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அண்ணாமலையார் மலையின் தன்மையை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட புவியியல் வல்லுனர்கள் நேற்று (சனிக்கிழமை) திருவண்ணாமலை வந்தடைந்தனர்.

இந்த நிலையில், வனத்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் புவியியல்துறை அதிகாரிகள் 2,668 அடி உயரம் உள்ள மலைக்குச் சென்று இன்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். மலையின் தற்போதைய நிலை, பாறைகள் மற்றும் மண்ணின் தன்மை குறித்து ஆய்வில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் அண்ணாமலையார் பாதம் உள்ள கொப்பரை வைக்கப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையின் மீது ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை இன்று அல்லது நாளை தமிழக அரசிடம் அதிகாரிகள் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆய்வு அறிக்கை வெளியான பின்னரே வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபம் பிரம்மோற்சவம் விழாவின் போது மலையின் உச்சிக்கு 2000 பக்தர்களை அனுமதிப்பார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.


Next Story