குறள் வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் பேணுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோரும் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உலகத்தார் அனைவருக்கும் பொதுநெறி வழங்கிய தமிழ்ப் பேரறிவின் அடையாளம் அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்! குறள் வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் பேணுவோம்!" என்று தெரிவித்துள்ளார்.