தந்தை பெரியாரின் நினைவைப் போற்றுவோம்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
தந்தை பெரியாரின் 51-வது நினைவு நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில் தந்தை பெரியாரின் நினைவைப் போற்றுவோம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
'எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்' என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று!
'மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு' என்பதை மானுடத்துக்கு உணர்த்த தனது இறுதி மூச்சு வரை தளராமல் உழைத்த தந்தை பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்ட நாள்!
சமூகநீதி, மதசார்பின்மை காக்க - மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
பெரியாரின் நினைவைப் போற்றுவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.