ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு


ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 Dec 2024 3:36 PM IST (Updated: 15 Dec 2024 5:25 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சென்னை,

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.. இது குறித்து அக்கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), பழ.ஆசைத்தம்பி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற்றில் தள்ளும் வகையிலும் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் மாநில உரிமைகளை மண் மேடாக்கும் வகையிலும், "ஒரே நாடு; ஒரே தேர்தல்" என்பதற்கான சட்ட முன்வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் நாளை(16.12.2024) தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக டிசம்பர் 16-ம் தேதி .நிகழ்ச்சி நிரலில் இந்த மசோதா இடம்பெற்றிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. ஆனால், அதேசமயம் இந்த கூட்டத் தொடரிலேயே இம்மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட முன்வரைவை அறிமுக நிலையிலேயே அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருசேர எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.

நடைமுறை சாத்தியமில்லாத இந்த ஜனநாயக விரோத சட்ட மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு மூர்க்கம் காட்டுகிறது. இந்தச் சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அரசியல் சட்டத்தில் ஆறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த அரசியல் சட்டத்திருத்தங்களை செய்யவேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். ஆனால், இரு அவைகளிலும் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ அத்தகைய பெரும்பான்மை இல்லை. இது நன்றாகத் தெரிந்தும் கொடுங்கோன்மையை கோலோச்ச செய்யும் இந்த சட்டமுன்வரைவை கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது. அனைத்திலும் ஒற்றைத் தன்மையை திணிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக வகையறாவின் அராஜகத்தின் ஒரு பகுதியே இந்த மசோதாவாகும்.

2029-ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு ; ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கொக்கரிக்கிறது. அப்படியானால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பல மாநில அரசுகளைக் கலைக்க வேண்டியிருக்கும். மாநிலச் சட்டப்பேரவைகளில் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் மத்திய அரசே அந்த மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படும்.

ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுமானால் மின்னணு வாக்குப்பதிவு ஏந்திரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என பல்வேறு சவால்கள் குறுக்கிடும் நிலை ஏற்படும். அவசரகோலத்தில் அள்ளித் தெளிப்பது போல இந்தச் சட்டமுன்வரைவை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அதானியை கைது செய்து விசாரிக்க வேண்டுமென நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரலெழுப்பி வரும் நிலையில், அதானியை பாதுகாக்கவும். இப்பிரச்சினையை திசை திருப்பும் நோக்கோடும் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், இந்தியாவின் மகத்தான பன்முகத்தன்மையையும் சிதைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்பாய்) லிபரசேன் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டிப்பதோடு, ஒரே நாடு, ஒரே தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து வலுவான கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story