தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: டி.டி.வி. தினகரன் கண்டனம்


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: டி.டி.வி. தினகரன் கண்டனம்
x
தினத்தந்தி 20 Dec 2024 3:22 PM IST (Updated: 20 Dec 2024 3:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்கதையாகிவிட்டது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

திருநெல்வேலியில் நீதிமன்ற வாசலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற கதவுகளை இழுத்து மூடி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்கதையாகிவிட்டது. இதற்கு திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலுமே காரணம் என்று மக்கள் உரத்தக் குரலில் சொல்ல தொடங்கி விட்டனர் .

விடியலை தருவோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றிய மு.க.ஸ்டாலின் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல்துறையைக் கூட முறையாக கையாள முடியவில்லை என்பதும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் தினம் தினம் நிரூபணமாகிவருகிறது.

இந்நிலையில் மீதமிருக்கும் சில மாதங்களாவது தமிழக மக்களின் மீது உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு அவர்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு தரக்கூடிய ஒரு அரசாக தமிழக அரசு இருந்திடவும்; தொடர்ந்து இதுபோல கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் முதல்-அமைச்சர்.மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story