திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் மண்சரிவு: 7 பேர் கதி என்ன?


தினத்தந்தி 2 Dec 2024 10:44 AM IST (Updated: 2 Dec 2024 1:38 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மேலும் ஒரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது. பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது.

சற்றும் எதிர்பாராமல் வேகமாக உருண்டு வந்த பாறை, வ உ சி. நகர் தெருவில் வீடுகளின் மீது விழுந்தது. இதில் இரு வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மண் சரிவு ஏற்பட்டு அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் பாதிக்கு மேல் மண்ணில் புதைந்தன.

இதனிடையே சம்பவம் நடந்த பகுதிக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் கூறுகையில், மலையில் இருந்து உருண்டு வந்த பாறையினால் மண் சரிவு ஏற்பட்டு ஒரு வீடு முற்றிலுமாக மூடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் மேல் நின்று கொண்டிருக்கும் பாறையானது எந்த நேரத்திலும் உருண்டு வரும் அபாயம் உள்ளது. வீட்டில் 2 ஆண், ஒரு பெண் மற்றும் 5 குழந்தைகள் இருந்ததாக அருகே உள்ளவர்கள் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சிக்கி உள்ளவர்களா?, அல்லது சம்பவத்தின்போது வெளியே சென்று இருந்தார்களா? என்பது குறித்த விவரம் தெரிய வில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில். மீட்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு, மீட்பு தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வீட்டின் மீது விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மேலும் ஒரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே ஒரு இடத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தநிலையில் மேலும் ஒரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே இடிந்த வீடுகளில் உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து முழு விவரங்கள் பாறையை அகற்றிய பிறகு தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது.


Next Story