நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் - 4 இடங்களில் முற்றிலும் அகற்றம்


நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் - 4 இடங்களில் முற்றிலும் அகற்றம்
x

லாரிகளில் ஏற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் தமிழக காவல்துறையின் கண்காணிப்புடன் கேரள எல்லை வரை கொண்டு செல்லப்பட உள்ளன.

நெல்லை,

கேரளா மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், சீதப்பற்றப்பநல்லூர், பழவூர், சிவனார்குளம், நடுக்கல்லூர் மற்றும் கொண்டாநகரம் ஆகிய பகுதிகளில் கொட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுத்தமல்லி போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து சுத்தமல்லி போலீசார் 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட கலெக்டர் காத்திகேயன் தெரிவித்தார். இதனிடையே பசுமை தீர்ப்பாயம், மருத்துவ கழிவுகளை கேரள மாநில அரசே அப்புறப்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.

இதைத் தொடர்ந்து மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி கலெக்டர் தலைமையில் 30 பேர் கொண்ட குழு கேரளாவில் இருந்து நெல்லை வந்தனர். பின்னர் தமிழக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன், கேரள மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, நெல்லை மாவட்டத்தில் 6 இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி முழுவீச்சில் தொடங்கியது. மருத்துவ கழிவுகள் சுமார் 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டன. கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 இடங்களில் கழிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன.

மேலும் கொண்டாநகரம் மற்றும் பழவூர் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளும் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன. அந்த கழிவுகளும் மொத்தமாக அகற்றப்பட்டு, சுமார் 20 லாரிகளில் தமிழக காவல்துறை கண்காணிப்புடன் கேரள எல்லை வரை கொண்டு செல்லப்பட உள்ளன. பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் வழியாக எர்ணாகுளத்தில் உள்ள கழிவுகள் மேலாண்மை மையத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story