கருணாநிதி நூல்கள் நாட்டுடைமை: அரசாணையை ராஜாத்தி அம்மாளிடம் வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்


கருணாநிதி நூல்கள் நாட்டுடைமை: அரசாணையை ராஜாத்தி அம்மாளிடம் வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்
x

கருணாநிதி நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான அரசாணையை ராஜாத்தி அம்மாளிடம் அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 188 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 15.32 கோடி நூலுரிமைத் தொகை தமிழ்நாடு அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதில் முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 139 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு 9.71 கோடி நூலுரிமைத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு நாளிதுவரை 31 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரியையர்களுக்கு ரூ.3.75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 22.08.2024 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத்தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இவ்வறிவிப்பிற்கிணங்க இலக்கிய இலக்கணப் படைப்புகளாகவும் ஆய்வாகவும் தமிழன்னைக்குத் தொண்டறம் பூண்டு வாழ்ந்து மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையினை க. ராஜாத்தி அம்மாளிடம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஔவை அருள் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story