கொட்டும் பனியில் காமன் பண்டிகை கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது
நீலகிரி,
தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்து வருகிறது. சிலப்பதிகாரம், கலித்தொகை உள்பட பழந்தமிழ் நூல்களில் பெருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காமன் பண்டிகையாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழர்கள் தலைமுறைகள் பல கடந்தாலும் தங்களது கலாச்சாரம், பாரம்பரிய பண்டிகைகளை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.
கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள ஆமைக்குளம் பகுதியில் காமன் பண்டிகை நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 6 மணி வரை விடிய விடிய நடைபெற்றது. இதற்காக கடந்த 1-ம் தேதி முதல் விரதம் இருந்த பக்தர்கள் ரதி, மன்மதன், சிவன், எமன் உள்ளிட்ட வேடமிட்டு வரலாற்றை நினைவு கூறும் வகையில் காமன் கூத்து நடத்தினர். இதில் ஏராளமான மக்கள் கொட்டும் பனியில் அமர்ந்தவாறு புராண வரலாற்றை நிகழ்வுகளை கண்டு ரசித்தனர்.
முன்னதாக சிவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இறுதியாக மன்மதனை சிவபெருமான் தீயால் எரிப்பது போன்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் உப்புகளை தூவி கிராம மக்கள் வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை காமன்கூத்து பண்டிகை குழுவினர், பக்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- பார்வதி தேவியின் தந்தை தச்சன் யாகம் நடத்தினார். அதில் பங்கேற்க வருமாறு சிவனை தச்சன் அழைக்க வில்லை. தனது தந்தையின் யாகத்தில் கலந்து கொள்வதற்காக பார்வதி சென்றார். தன்னை தச்சன் அவமதித்து விட்டதாக கோபம் அடைந்த சிவன் கடும் தவத்தில் ஆழ்ந்தார். மேலும் அழைக்காமலேயே சிவன் யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என எண்ணினார்.
இதற்காக தட்சனின் பணியாளர்கள் மன்மதனை அணுகி சிவனின் தவத்தை கலைக்க உத்தரவிட்டனர். திருமண கோலத்தில் இருந்த மன்மதன், ரதியை திருமணம் செய்துவிட்டு தயாரானார். இதனால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்த ரதி தனது கனவில் எமன் உள்ளிட்ட பூத கணங்கள் வருவதாக கூறி மன்மதனை செல்ல விடாமல் தடுத்தார். அதை பொருட்படுத்தாமல் கரும்பு வில் மூலம் சிவனின் தவத்தை மன்மதன் கலைத்தார்.
இதனால் கடும் கோபமடைந்த சிவன் வீரபத்திரராக மாறி நெற்றிக்கண் தீயால் மன்மதனை எரித்தார். இதை அறிந்த ரதி, சிவனின் காலில் விழுந்து கணவரை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் விட்டு கதறினாள். இதனால் இரக்கம் கொண்ட அவர், மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த புராண வரலாற்றை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் விரதம் இருந்து பக்தர்கள் வேடமிட்டு தத்ரூபமாக கூத்து நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.