அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்: எஸ்.பி.வேலுமணி உருக்கம்
2026 சட்டசபை தேர்தலில் அதிமுகதான் நிச்சயமாக ஆட்சிக்கு வரும் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.
சென்னை,
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-
அதிமுக ஆட்சியில் காவல்துறையை மரியாதையாக நடத்தினோம். ஆனால் இப்போது காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதனால் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறை யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
அதிமுகவினர் எங்கு சென்றாலும் அவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். கடந்த வாரம் தூத்துக்குடிக்கு சென்றிருந்தேன். என் மீதும் கடம்பூர் ராஜு மீதும் வழக்கு போட்டுள்ளனர். இதனால் எங்களுக்கு ஒரு பிரச்சினையுமில்லை. காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகதான் நிச்சயமாக ஆட்சிக்கு வரும்.
தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் 2011-ல் ஆட்சி, 2016-ல் தொடர் ஆட்சியை ஜெயலலிதா கொண்டு வந்தார். எங்களையெல்லாம் எம்.எல்.ஏ. ஆக்கி அழகு பார்த்தார். அப்போது மட்டும் ஜெயலலிதா அமெரிக்க சென்று சிகிச்சை பெற்றிருந்தால் இன்னும் உயிரோடு இருந்திருப்பார். கட்சி, ஆட்சி நலனை மட்டும் கருத்தில்கொண்டு செயல்பட்டதால் அவர் அமெரிக்கா செல்லவில்லை. ஆட்சி நல்லா இருக்கனும், கட்சி நல்லா இருக்கனும், ஆட்சியும் கட்சியும் 100 ஆண்டுகள் நல்லா இருக்கனும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசினார். இவ்வாறு அவர் கூறினார்.