'அறுவடைத் திருநாளின் குறியீடாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது' - சு.வெங்கடேசன் எம்.பி.
அறுவடைத் திருநாளின் குறியீடாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.
மதுரை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெறுகிறது. இந்நிலையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாள். இந்த அறுவடைத் திருநாளின் முக்கியமான குறியீடாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது. இது கால்நடைக்கும், மனிதனுக்கும் இடையேயான உறவின் குறியீடு.
ஜல்லிக்கட்டு போட்டியில் வீரன் அல்லது காளை என யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம், ஆனால் யாரும் தோற்கமாட்டார்கள். அப்படி ஒரு வடிவம் இந்த விளையாட்டிற்கு இருக்கிறது. இந்த விளையாட்டில் இன்னும் சில விஷயங்களை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. வீரர்களுக்கு காயம் ஏற்படாத வகையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது நல்ல விஷயமாக உள்ளது" என்று தெரிவித்தார்.