கடலூர்: குளத்தில் மூழ்கிய ஐ.டி.ஐ. மாணவர் சடலமாக மீட்பு
கடலூரில் குளத்தில் மூழ்கிய ஐ.டி.ஐ. மாணவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்கள் நேற்று நத்தப்பட்டில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர். அவர்களில் கதிர் என்ற மாணவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார். இதையடுத்து இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முழுவதும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் மாணவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் தேடுதல் பணி தொடர்ந்த நிலையில் ஐ.டி.ஐ. மாணவர் கதிர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.