ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக விஜய் பேசியிருப்பது வியப்பாக உள்ளது: பொன். ராதாகிருஷ்ணன்


ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக விஜய் பேசியிருப்பது வியப்பாக உள்ளது: பொன். ராதாகிருஷ்ணன்
x

குடும்ப அரசியல் ஒரு கேவலமான நிலை என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரையில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஒரு தேர்தலையும் சந்திக்காக நடிகர் விஜய், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிராக பேசியிருப்பது வியப்பாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு எவ்வளவு செலவாகிறது. இதை குறைப்பது தேசிய கடமை. இதற்காகவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஒரே தேர்தலின் போதும் தங்களது கருத்துகளை செயல்படுத்த முடியும்.

தவெக ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தில் பங்கு அளிப்பதாக விஜய் பேசியுள்ளார். இதை கட்சிகள் வரவேற்கலாம். மக்கள் மத்தியில் உடனடி வரவேற்பு கிடைக்காது. கூட்டணியில் இருந்தால் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்; அந்த மனநிலையில் திமுக இல்லை. பிற கட்சிகள் அந்த மனநிலையில் இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால் பாஜக இதை நடைமுறைப்படுத்தி வருகிறது.

குடும்ப அரசியல் ஒரு கேவலமான நிலையாகும். ஒரு குடும்பத்தை விட்டால் கதியில்லை என்ற நிலைக்கு காங்கிரஸ், திமுக தள்ளப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளும் குடும்ப அரசியல் செய்கின்றன. திமுகவின் குடும்ப அரசியல் குறித்து பேசும் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் அரசியலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?. பாஜக ஒருபோதும் குடும்ப அரசியல் செய்யாது. குடும்ப அரசியலுக்கு வரும் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story