திருச்சியில் ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து வழிபாடு செய்த வினோதம்
திருச்சியில் ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து வினோத வழிபாடு செய்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோம்பை மற்றும் வண்ணாடு ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகளான செம்புளிச்சான்பட்டி, மேலூர், சின்ன இலுப்பூர், பெரிய இலுப்பூர், தேன்பாடி, பாளையம், நாகூர், தாளூர் உள்ளிட்ட 33 கிராமங்களில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையின் முதல் நாளான சூரிய பொங்கலன்று, பச்சைமலையில் கடுமையான பனிப்பொழிவு காலை 10 மணி வரை நிலவும் என்பதால் பொங்கல் பண்டிகையினை மாலையில் வைத்து வழிபடுவது வழக்கமாக கொண்டுள்ளார்கள். இந்த பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும், மேலும் பெண்கள் பொங்கல் வைக்காமல், ஆண்களே பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்கின்றனர்.
இவர்கள் பொங்கல் வைப்பதற்காக பச்சைமலையில் மட்டும் விளையக்கூடிய அரிய நெல் வகைகளான புழுதிகார நெல், மர நெல், தூண்கார நெல் ஆகிய நெல் வகைகளை மட்டுமே இவர்கள் பொங்கல் வைக்க பயன்படுத்துகிறார்கள். இவ்வகையான நெல்களுக்கு இயற்கையான உரங்களை மட்டுமே பயன்படுத்துவதும், ரசாயன உரங்களை பயன்படுத்துவது கிடையாது என்பதும் வியக்கத்தக்கதாக உள்ளது. மேலும் வீடுகள் தோறும் பொங்கலன்று மாவிலை, பாலை இலை, பூளாப்பூ ஆகிய மலையில் விளையக்கூடிய பூக்களை கொண்டு வீட்டுவாசல் முன்பு தோரணம் கட்டி வாசலில் விறகு அடுப்பு வைத்து பொங்கல் வைக்கிறார்கள்.
பின்பு வீட்டின் வாசல்படி முன்பு கரும்பு வைத்து, சமைத்த பொங்கலை வைத்தும், சாமி கும்பிடுவதற்காக மலைப்பகுதியில் உள்ள தும்பைப் பூ, பண்ணைப்பூ அருகம்புல், ஓனாண் பூ ஆகிய பூக்களை மட்டுமே வைத்து சூரிய பொங்கல் கொண்டாடுகிறார்கள். பொங்கலுக்கு புதுமண தம்பதிகளுக்கும், உறவினர்களுக்கும் பச்சை மலையில் விளையக்கூடிய புழுதிகாரநெல், மரநெல், தூண்கார நெல் வகைகளில் தூண்கார நெல்லை மட்டும் பொங்கல் சீர்வரிசையாக கொடுக்கிறார்கள்.
இந்த வழக்கத்தினை காலம் காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். மாலையில் பொங்கல் வைத்து வழிபாடு முடிந்த பின் இரவில் இளைஞர்கள் ஒன்று கூடி வழுக்கு மரம் ஏறுதல், ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது பச்சை மலையில் வழக்கமாக உள்ளது. நேற்று முன்தினம் சூரிய பொங்கல் என்பதால் பச்சை மலைப் பகுதிகளில் மாலை வேளையில் ஆண்கள் பொங்கல் வைத்து வினோத வழிபாடு செய்தனர். இன்றைய நவீன காலக்கட்டத்திலும் பழமை மாறாது, பண்பாட்டு முறையை மலைவாழ் பழங்குடியின மக்கள் கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.