பொதுக்குழுவில் காரசாரமான விவாதம் நடப்பது சகஜம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி


பொதுக்குழுவில் காரசாரமான விவாதம் நடப்பது சகஜம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 29 Dec 2024 2:39 PM IST (Updated: 29 Dec 2024 3:37 PM IST)
t-max-icont-min-icon

பா.ம.க.வின் உட்கட்சி பிரச்சினையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என அன்புமணி ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம்,

புதுவையில் நேற்று பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமனம் செய்வது தொடர்பாக ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அதாவது, கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமிக்க, இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ராமதாஸ் ஆவேசமாக பேசுகையில், இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும். கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். என கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறி விட்டு மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார். ராமதாசும், அன்புமணியும் ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இருவருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, பேசியதாவது;

"பா.ம.க. ஒரு ஜனநாயக கட்சி. கட்சி பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான். ஐயா எப்போதும் எங்களுக்கு ஐயாதான். பா.ம.க.வின் உட்கட்சி பிரச்சினையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். பா.ம.க.வின் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து மற்றவர்கள் பேசக்கூடாது. கட்சியின் வளர்ச்சி, சட்டமன்றத் தேர்தல், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து பேசினோம்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story