மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 சதவீதமாக உயர்த்துக: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்திற்கான வரிப்பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னையில் மத்திய நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிதிக்குழு பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படும் நிலையில் ஆலோசனை நடந்து வருகிறது.
நிதிக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்திற்கான வரிப்பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது. வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்காத வகையில் புதிய அணுகுமுறை தேவை. தற்போதைய வரிப் பகிர்வு முறை தமிழகத்தின் வளர்ச்சியை தண்டிப்பதுபோல் உள்ளது.
மாநிலங்களுக்கு சமச்சீரான வரி பகிர்வு அளிக்க வேண்டும. வரிப்பகிர்வு மாநில அரசின் செயல்பாட்டை தொய்வடையும் செயலாக உள்ளது. இயற்கை பேரிடரை சந்திக்கும் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. மாநிலம் சார்பில் பேரிடர்களுக்கு அதிக நிதி செலவிடப்படுவதால், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியவில்லை.
16-வது நிதிக்குழு பரிந்துரைகள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் வகையில் அமைய வேண்டும். மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 41 சதவீதமாக மாற்றியதை வரவேற்கிறோம்; வரி வருவாயை 33.16 சதவீதம் மட்டுமே மத்திய அரசு பகிர்ந்து அளித்துள்ளது. மத்திய அரசின் வரிப் பகிர்வால் மாநில அரசுகள் பாதிப்படைகின்றன. மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 சதவீதம் ஆக மத்திய அரசு உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும்.
முக்கியமான திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசுகளின் பங்கு முக்கியம். கூட்டாட்சி தத்துவம் மூலம் மாநிலங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. போதிய அளவு மத்திய அரசு நிதி ஒதுக்காததால் தமிழ்நாட்டின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு பெற்று வந்த பயன்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்பு முதியவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் உள்ளது.
சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை குறைத்து, வளர்ச்சியை எதிர்நோக்கும் பகுதிகளுக்கு நிதி ஆதாரங்களை மடை மாற்றுவதால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் வளர்ச்சிக் குன்றிய மாநிலங்களுக்கு இறுதியாக கிடைக்கும் வரிப்பகிர்வும் குறைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.