கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...?
பெஞ்சல் புயல் மற்றும் கனமழை எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
பெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையை கடந்த புயல் பின்னர் வலுவிழந்து உள்ளது. எனினும், புயலால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெஞ்சல் புயல் மற்றும் கனமழை தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே, கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.