கொளத்தூர் ஏரியின் முன்னேற்ற பணிகள் .... 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து சேகர்பாபு ஆய்வு

மொத்தம் 13 ஏரிகளில் முடிந்த அளவிற்கு 2025 டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகள் நிறைவுற்று இருக்கும் என சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி இன்று (15.2.2025) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரியின் முன்னேற்ற பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு ஆய்வு செய்து, ஏரியின் ஓரமாக வசிக்கின்ற 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது :
தமிழக முதல்வர் தலைமையிலே பொறுப்பேற்ற இந்த அரசு கிட்டத்தட்ட 45 கால மாத பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பெருநகர சென்னைக்கு தன்னுடைய சிந்தனையில் உதித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்தது, அந்த வகையிலேயே ஏரிகளை புணரமைத்து அந்த ஏரிகளை அழகுபடுத்தி, காலையில் உடற்பயிற்சிக்கு ஏற்ற வகையில் அமைத்து, அதேபோல் பொழுதுபோக்கிற்காக அந்த இடங்களை பூங்காக்கள் போல் வடிவமைத்து தருவதும், படிக்கின்ற குழந்தைகளுக்கும் கல்லூரியில் படிக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு ஏற்ற வகையில் அந்தப் பூங்காக்களில் மின் விளக்குகளை ஏற்படுத்தி, இருக்கை வசதிகளோடு கட்டமைப்பு தருகின்ற பணிகளை தமிழக முதல்வர் மேற்கொண்டதின் பயனாக கிட்டத்தட்ட 13 ஏரிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பணிகளை மேற்கொண்டு தற்போது அந்த பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றன. இந்த 13 ஏரிகளுக்குண்டான தொகை 250 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதி தான் இன்றைக்கு நாம் காலையிலே ஆய்வு செய்து இருக்கின்ற கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த ஏரியாகும்.
இந்த ஏரியை அழகுபடுத்தி பெரும் வெல்ல மழைக்காலத்தில் அந்த ஏரிக்கு வருகின்ற தண்ணீரை, தண்ணீர் கொள்ளளவு அதிகரிக்கின்ற பொழுது ரெட்டில்ஸ் பகுதி வாயிலாக தணிகாசலம் கால்வாய்க்கு கொண்டு செல்வதற்கு வடிகால்வாய் வடிவமைப்பது குறித்து இன்றைக்கு களத்திலே எங்கள் துறையினுடைய செயலாளர் காகர்லா உஷா , மேயர் பிரியா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சிஇஓ சிவஞானம் , இந்த தொகுதியின் உடைய கண்காணிப்பு அலுவலர் கணேசன் , சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே , மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோர் ஒருங்கிணைந்து ஆய்வினை மேற்கொண்டோம்.
இதில் கால்வாய் ஓரமாக இருக்கின்ற 81 வீடுகள் ஏற்கனவே கண்டறியப்பட்டு தமிழக முதல்வர் அவர்களை அப்புறப்படுத்துவதற்கு ஒன்றரை ஆண்டுகள் முன்பே அனுமதி வழங்கி இருந்த நிலையில், அவர்களுக்கு மாற்று இடம் தந்த பிறகுதான் அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தார்கள். அந்த வகையில் அவர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் மாற்று இடத்தை மூலக்கொத்தளம் பகுதியில் ஒதுக்கீடு செய்து, ராம்தாஸ் நகர் பகுதியில் அவர்களை அந்த பகுதியில் இருந்து மறுபடியும் மாற்று இடத்தை செய்த பிறகு சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பு உள்ள இந்தப் பகுதியையும் நடைபாதை பூங்கா போன்றவற்றை அமைத்து, மழைநீர் வருகின்ற நீர்வழி தடத்தை
ஏற்படுத்தி, வெள்ளம் ஏற்படுகின்ற பொழுது நிரந்தரமாக இந்த பகுதியில் ஒரு பாதுகாப்பான சூழல் உருவாக்குவதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைக்கு கால்வாயினை மேற்கண்டிருக்கின்றோம். இந்த பணிகள் அனைத்தும் 6 மாதத்திற்குள் திட்டமிட்டு முடிப்பதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
கழிவுநீர் கலக்கின்ற சூழல் இருக்கின்ற குளங்களுக்கு, அதாவது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தேவைப்படுகின்ற ஏரிகள் இடத்தில், இந்த கட்டமைப்பை உருவாக்கி வருகின்றோம். உதாரணத்திற்கு ஆலந்தூர் ஏரியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நானும் எனது துறையினுடைய செயலாளர் அவர்களும் அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தோம் அந்த ஏரியை பொறுத்தளவில் கழிவுநீர் கலக்கின்ற சூழல் இருப்பதால் அங்கு மறுசுழற்சி (Recycling) செய்கின்ற முறையில் சென்டரை நிறுவுவதற்குண்டான ப்ரோபோசல் தயார் செய்து கொண்டிருக்கின்றோம். எல்லா வகையிலும் ஏரியை உருவாக்குகின்ற பொழுது அந்த ஏரி மக்களுடைய பயன்பாட்டிற்கும் பெரு வெள்ளம், மழையின் பொழுது ஏற்படுத்துகின்ற சூழலை உருவாக்குவதற்காகவும் கட்டமைப்பை உருவாக்குவது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உடைய நோக்கம், அந்த வகையில் இந்த ஏரிகளை நாங்கள் முழுவதுமாக புணரமைத்த பிறகு கழிவுநீர் இதில் கலக்காத வண்ணம் எடுக்கப்படுகின்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவோம்.
13 ஏரிகளில் கிட்டத்தட்ட ஒன்பது ஏரிகளின் உடைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆலந்தூர் போன்ற ஏரிகளில் மறுகட்டமைப்பு வருகின்ற கழிவுநீர்களை மறுசுழற்சி செய்வதற்குண்டான இடம் தேர்வு நடந்து கொண்டிருக்கின்றன. இந்த 13 ஏரிகளும் முடிந்த அளவிற்கு 2025 டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகள் நிறைவுற்று இருக்கும். இவ்வாறு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மேயர் பிரியா ராஜன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலர் திரு.அ.சிவஞானம்,கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் ப.கணேசன், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், திரு.வி.க.நகர் மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், கண்காணிப்பு பொறியாளர்கள் ராஜமகேஷ்குமார் (சிஎம்டிஏ), திரு.பொதுப்பணி திலகம் (நீர்வள ஆதாரத்துறை), திரு.இளம்பருதி (தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம்), ராதாகிருஷ்ணன் (சென்னை குடிநீர் வழங்கல் துறை), மாநகராட்சி மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன், செயற்பொறியாளர்கள் ராஜன்பாபு, செந்தில்நாதன், மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், சாரதா, தாவூத்பீ, அமுதா,ஸ்ரீதனி, உள்ளாட்சி பிரதிநிதிகள் ஐ.சி.எப்.முரளிதரன், சந்துரு, திரு.மகேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.